Sunday, June 11, 2017

குண்டலகேசி - 2



மகளின் பிடிவாதத்தால், வேறு வழி அறியாத வணிகமணி மன்னனைக் காணச் சென்றார்

அவருக்கும், சோழனுக்கும் நல்ல பழக்கம் இருந்ததால், இரவானாலும், அவரை வரவேற்றான் மன்னன்

"இரவில் என்னைத் தேடி வந்துள்ளீர்கள்..நான் ஏதேனும் உதவ வேண்டுமா?" என்றான் மன்னன்

"நான் கேட்பதைத் தருவீர்களா?"

மன்னனும் தருவதாக வாக்களித்தான்.தன் நிலையை எடுத்துக் கூறி காளனை விடுவிக்கச் சொன்னார் வணிகமணி

மன்னனும், தான் அளித்த வாக்கைக் காப்பாற்ற அவனை விடுவித்தான்

பின், ஒரு நல்ல நாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது.காளனுக்கு ஏராளமான பொன்னும், மணியும், பொருளும் சீதனமாகத் தரப்பட்டது

ஆயினும், அவனுக்கு ஆசை விடவில்லை.தன் திருட்டுத் தொழிலை மீண்டும் தொடங்கினான்

குண்டலகேசி அவனைக் கண்டிக்க, அது பிடிக்கவில்லை அவனுக்கு.

ஒருநாள், அவளிடம்"நாம் மலையுச்சிக்குச் சென்று உல்லாசமாய் இருப்போம் வா" என்று சொல்லி மலையின் உச்சிக்கு அவளை அழைத்துச் சென்றான்

அங்கிருந்து, அவளை தள்ள முயற்சிக்க ,குண்டலகேசி சுதாகரித்துக் கொண்டாள்.பின் காலனிடம், "தங்கள் விருப்பம் இதுவானால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கு  முன் கணவனை வலம் வரும் பெண்கள்
பாக்கியசாலிகள்.எனக்கு அந்த பாக்கியத்தை அளிக்க வேண்டும்:" என்றாள்

காளனும் சம்மதித்தான்.

அவனை இருமுறை வலம் வந்தவள், மூன்றாம் முறை வலம் வருகையில் அவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள்.காளன் உயிரிழந்தான்.

பின் குண்டலகேசி, தன் ஆசையே இதற்கெல்லாம்  காரணம் என உணர்ந்து,. ஆசைகளை விட்டொழித்து புத்தரின்  போதனையை உலகெங்கும் பரப்பினாள் இறுதிகாலம் வரை.

(இளம் பெண்கள்..பெற்றோர் சொல் கேட்டு திருமணம் செய்து கொள்வதே பாதுகாப்பு என அன்றே இக்காவியம் உணர்த்துகிறது)

Saturday, June 10, 2017

குண்டலகேசி - 1



(இக்காப்பியம் பௌத்தம் சார்ந்ததாகும்.தன்னை கொலை செய்ய முயன்ற கணவனைக் கொன்று விட்டு பௌத்த துறவியாக ஆகி அச் சமயத்தின் பெருமைகளைப் பரப்பியவர் குண்டலகேசிஎன்ற பெண். .கிபி 7ஆம் நூற்றாண்டு காப்பியம் இது.

குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்று பெயர்)

காவிரிபூம்பட்டிணத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் கரிகாலன் ஆண்டு வந்தான்

அவ்வூரில் வணிகமணி என்றொரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.அவரது மகளே குண்டலகேசி,பேரழகி.மன்னன் அரண்மனைக்கருகில் ஒரு மாளிகையே அவர்கள் வீடு

அவ்வூரில் வணிகம் செய்து வந்தவன் காளன் (சத்துவான் அவனது இயற்பெயர்).வாணிபத்தில் அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், திருடத் தொடங்கினான்.ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்ட அவனைக் காவலர்கள் கைது செய்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்

தன் வீட்டு மாடியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி அக்காட்சியைப் பார்த்தாள்.

அவன் ஒரு குற்றவாளி என்பது பற்றி சிறிதும் கவலைப் படாமல் , அவன் மீது காதல் கொண்டாள்.அந்த அளவிற்கு அழகானவன் காளன்

மன்னன் முன் நிறுத்தப்பட்ட காளனுக்கு, அரசன் மரணதண்டனை விதித்தான்.மறுநாளே அவனை தூக்கிலிடுமாறு ஆணையிட்டான்.

இதனிடையே குண்டலகேசி , தன் தந்தையிடம்  தன் காதலைச் சொன்னாள்.
தந்தை   அவளைக் கண்டித்தும்...தன் முடிவில் பிடிவாதமாய் இருந்தாள்

Friday, June 9, 2017

வளையாபதி - 2



மகன் தந்தையைத் தேடிச் சென்றான்

அவரைக் கண்டு, தான் அவரால் கைவிடப்பட்ட அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்றான்

தந்தையோ அவனை நம்பாமல் அவனை துரத்தியடிக்கிறார்

அவன் தந்தையை வீதிக்கு இழுத்துக் காளியை சாட்சியாக அழைக்கிறான்.தன் தாயின் கற்பினை நிலை நாட்ட வேண்டுகிறான்.காளியின் உதவியால் உண்மையைசெட்டி அறிகிறார்

பின் அவர் மகனை வீரவாணிபன் என்னும் பெயரிட்டு அவனை வாணிகணாகத் தொழில் தொடங்கவும் உதவுகிறான்

இதுதான் வைர வாணிகன் வளையாபதியின் கதைச் சுருக்கமாகும்

ஆனால் வளையாபதி என்ற பெயர் எச்செய்யுளிலும் சொல்லப் படவிலலை

இக்கதையின் தலைவன் சைவ ஐந்தெழுத்தை இறைவணக்க மந்திரமாகக் கொண்டவன். காளியும் ஒரு மையமானப் பாத்திரம்

ஆனால் கிடைத்துள்ள செய்யுள்களோ இது ஒரு சமணநூல் என தெரிவிக்கின்றன

வளையாபதி காத்தவராயன் கதையைப் புராணவடிவத்தில் சொல்லியுள்ளதாக கருதப்படுகிறது.மலையாளத்திலும், தமிழிலும் வழங்கும் காத்தவராயன் கதை சாதி வரம்பை மீறி மணப்பதால் ஏற்படும் துன்பங்களைக் கூறுவது.அதனால் இது ஒரு சமணக்காவியம் என்றும் கூறப்படுகிறது

கிடைத்துள்ள செய்யுள்களை வைத்துப் பார்க்கும் போது , உலக வாழ்வின் இன்பங்களை மறுத்து, துறவறம் போற்றுவதும்,பெண்களின் மீது பொதுவாக வெறுப்பையும் காட்டுவதாகத் தெரிகிறது

பெண் மறுப்பு,சிற்றின்பத் துறவு,புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை போன்றவற்றை இககவியம் கூறுவதால் ..இதன் ஆசிரியர் திறம் மிக்க சமணத் துறவியர் ஆவார்

(ஆதாரங்கள் மயிலை சீனி வெங்கடசாமியின் "மறைந்து போன தமிழ் நூல்கள்)

வளையாபதி - 1



ஐம்பெருங்காப்பியங்களில் நாங்காவதாய் சொல்லப்படுவது வளையாபதி ஆகும்.

வளையாபதியும், குண்டலகேசியும் பற்றி முழுதுமாகக் கிடைக்கவில்லையேயாயினும், வளையாபதியில் ஒன்றுமே கிட்டாமல் இல்லை

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அது தொலையாமல் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.தமிழ்த்தாத்தா எனப் போற்றப்படும் டாக்டர் உ.வே,சாமிநாத ஐயர் அவர்கள், ஒருமுறை திருவாவடுதுறை ஆதின மடத்தின் நூலத்திற்குச் சென்ற போது, வளையாபதியின் சுவடிகளை தம் கண்ணால் கண்டதாகவும், அப்போது, அவர் பழஞ்சுவடிகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாடஹ்தால் அதிப் புறக்கணித்து விட்டதாகவும், பின்னர், சுவடிகளைக் காக்கும் விருப்போடு அங்குச் சென்ற போது அவை காணவில்லை என்றும்..."என் சரித்திரம்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்

வளையாபதியின் ஆசிரியர், இயற்றப்பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர் ,ஆகியவை நமக்குத் தெரியவில்லை.ஆனால், அக்காவியத்தின் 72 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன

இது சமண சமய நூல் .தனியழகுள்ள நூல் என ஒட்டக்கூத்தரும் கருதியதாகத் தெரிகிறது.நூல் கிபி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் போது இயற்றப்பட்டிருக்கலாம்

வளையாபதியின் கதைச் சுருக்கம் இதுவே!

வைரவாணிப மகரிசிக் கோத்திரத்தைச் சேர்ந்தவனும், சிவ பக்தனும் ஆன நவகோடி நாராயணச் செட்டி என்பவனுக்கு இரண்டு மனைவியர்

ஒருத்தி, அவனது சாதியான வைசியச் சாதியைச் சார்ந்தவள்.மற்றொருத்தி வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவள்.

வேற்று சாதிக்காரியை மணந்ததால் நவகோடி நாராயணச் செட்டியின் சாதியைச் சேர்ந்தவர்கள் அவரை சாதியை விட்டு ஒதுக்கி வைக்க, அதனால் செட்டி தன் இரண்டாம் மனைவியை , அவள் கர்ப்பமாக இருந்த போதும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.

பின், செட்டியும் கடல் பயணம் செய்து, வாணீபத்தில் மேலும் பொருளீட்டி திரும்பி, தன் முதல் மனைவியுடன் இன்பமாக இல்லறம் நடத்துகிறான்

சில மாதங்கள் கழிந்தது..

அவனது இரண்டாம் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.அவனை அவள் வளர்த்து வருகையில், அவனின் நண்பர்கள், அவன் தகப்பன் பெயர் தெரியாடஹ்வன் என எள்ளி நகையாடி...அவனைத் துன்புறுத்துகின்றனர்

நாளி எனும் காளியின் வடிவமாகிய தெய்வத்தின் அன்பு கொண்ட அவன் தாய் , அவனது தந்தை யார் என்பதை அவனுக்குத் தெரிவிக்கின்றாள்

(தொடரும்)

Tuesday, June 9, 2015

சிலப்பதிகாரம்-2

இளவேனிற் பருவமும் வந்தது. கோவலின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே!தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இள்வேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது.. இளவேனில் பற்றிய ஏக்கமே,கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று .


கண்ணகி , தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம்.சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள்.

 கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின;அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத்தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி"சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். 

Friday, March 6, 2015

சிலப்பதிகாரம்-1



சிலம்பு+அதிகாரம் என்பதே சிலப்பதிகாரம் ஆயிற்று.இக்காப்பியத்தில், இயல்,இசை,நாடகம்  என மூன்றையும் காணலாம்.
, கோவலன் என்னும் குடிமகனைப் பற்றிய காப்பியம் ஆனதால்'குடிமக்கள் காப்பியம் என்றும் கூறப்படுகின்றது.இதை எழுதியவர் இளங்கோவடிகள் ஆவார்.இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவார்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
 இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

இந்நூல் புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

இனி சிலப்பதிகாரம் காப்பியத்தின் கதை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1-கண்ணகி-கோவலன்-மாதவி

காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான் என்றொரு வணிகன் இருந்தான்.அவனது மகன் கோவலன்.கோவலன் சிறுவயது முதலே ஏழைகளுக்கு உதவும் நற்பண்பு கொண்டவன்.கலை ஆர்வம் மிக்கவன்.

அதே ஊரில் இன்னொரு பெரிய வணிகன் இருந்தான்.அவன் பெயர் மாநாய்கன்.அவனது மகள் கண்ணகி.கண்ணகி, அழகும், குணச்சிறப்பும், கொண்டவள்.

கோவலனுக்கும், கண்ணகிக்கும் மணம் முடிந்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

மாதவி என்னும் ஆடல் மகள் சோழன் முன்னர் தன் திறமையையெல்லாம் காட்டி ஆடினாள்.அதனால், ஆயிரத்து எட்டுக் கழிஞ்சூப் பொன்னை பரிசாகப் பெற்றாள்.அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல் அரசனின் பச்சை மாலையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் பெற்றாள்.

ஒருநாள் பெருந்தெருவிலே கூனி மாதவியின் மாலையை விற்றாள்.கோவலன் அத ஆயிரம் பொன் கொடுத்து வாங்கினான்,பின், அவளுடனேயே மாதவியின் மனைக்குச் சென்றான்.கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டிலேயே தங்குபவனானான்.


வஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரை சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர்


கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே,இருவரிடையே மீண்டும் ஊடல்.கோவலனின் மனம் மாறுகின்றது.அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோத்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனாக ஆகிறான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே,தனியாகவே, தன் மனை சென்றாள்

Tuesday, October 7, 2014

மணிமேகலை- 6

மணிமேகலை- 6

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள்.  அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள்.  அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்;  புழுக்கறையில் அடைக்கிறாள்;  ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள்.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.  பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.  அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள்.  அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள்.  அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான்.  அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம்,  கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது,  மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது.  உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது.  மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து,   அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி,  பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள்.  அவள் மனம் அமைதி பெறவில்லை.  அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள்.  அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள்.  அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர்மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள் முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’  என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். இந்நிகழ்ச்சியுடன் மணிமேகலைக் காப்பியக் கதை நிறைவு பெறுகிறது.