Tuesday, June 9, 2015

சிலப்பதிகாரம்-2

இளவேனிற் பருவமும் வந்தது. கோவலின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே!தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இள்வேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது.. இளவேனில் பற்றிய ஏக்கமே,கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று .


கண்ணகி , தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம்.சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள்.

 கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின;அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத்தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி"சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். 

No comments:

Post a Comment