Friday, March 6, 2015

சிலப்பதிகாரம்-1



சிலம்பு+அதிகாரம் என்பதே சிலப்பதிகாரம் ஆயிற்று.இக்காப்பியத்தில், இயல்,இசை,நாடகம்  என மூன்றையும் காணலாம்.
, கோவலன் என்னும் குடிமகனைப் பற்றிய காப்பியம் ஆனதால்'குடிமக்கள் காப்பியம் என்றும் கூறப்படுகின்றது.இதை எழுதியவர் இளங்கோவடிகள் ஆவார்.இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவார்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
 இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

இந்நூல் புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

இனி சிலப்பதிகாரம் காப்பியத்தின் கதை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1-கண்ணகி-கோவலன்-மாதவி

காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான் என்றொரு வணிகன் இருந்தான்.அவனது மகன் கோவலன்.கோவலன் சிறுவயது முதலே ஏழைகளுக்கு உதவும் நற்பண்பு கொண்டவன்.கலை ஆர்வம் மிக்கவன்.

அதே ஊரில் இன்னொரு பெரிய வணிகன் இருந்தான்.அவன் பெயர் மாநாய்கன்.அவனது மகள் கண்ணகி.கண்ணகி, அழகும், குணச்சிறப்பும், கொண்டவள்.

கோவலனுக்கும், கண்ணகிக்கும் மணம் முடிந்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

மாதவி என்னும் ஆடல் மகள் சோழன் முன்னர் தன் திறமையையெல்லாம் காட்டி ஆடினாள்.அதனால், ஆயிரத்து எட்டுக் கழிஞ்சூப் பொன்னை பரிசாகப் பெற்றாள்.அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல் அரசனின் பச்சை மாலையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் பெற்றாள்.

ஒருநாள் பெருந்தெருவிலே கூனி மாதவியின் மாலையை விற்றாள்.கோவலன் அத ஆயிரம் பொன் கொடுத்து வாங்கினான்,பின், அவளுடனேயே மாதவியின் மனைக்குச் சென்றான்.கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டிலேயே தங்குபவனானான்.


வஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரை சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர்


கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே,இருவரிடையே மீண்டும் ஊடல்.கோவலனின் மனம் மாறுகின்றது.அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோத்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனாக ஆகிறான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே,தனியாகவே, தன் மனை சென்றாள்

No comments:

Post a Comment