Sunday, June 11, 2017

குண்டலகேசி - 2



மகளின் பிடிவாதத்தால், வேறு வழி அறியாத வணிகமணி மன்னனைக் காணச் சென்றார்

அவருக்கும், சோழனுக்கும் நல்ல பழக்கம் இருந்ததால், இரவானாலும், அவரை வரவேற்றான் மன்னன்

"இரவில் என்னைத் தேடி வந்துள்ளீர்கள்..நான் ஏதேனும் உதவ வேண்டுமா?" என்றான் மன்னன்

"நான் கேட்பதைத் தருவீர்களா?"

மன்னனும் தருவதாக வாக்களித்தான்.தன் நிலையை எடுத்துக் கூறி காளனை விடுவிக்கச் சொன்னார் வணிகமணி

மன்னனும், தான் அளித்த வாக்கைக் காப்பாற்ற அவனை விடுவித்தான்

பின், ஒரு நல்ல நாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது.காளனுக்கு ஏராளமான பொன்னும், மணியும், பொருளும் சீதனமாகத் தரப்பட்டது

ஆயினும், அவனுக்கு ஆசை விடவில்லை.தன் திருட்டுத் தொழிலை மீண்டும் தொடங்கினான்

குண்டலகேசி அவனைக் கண்டிக்க, அது பிடிக்கவில்லை அவனுக்கு.

ஒருநாள், அவளிடம்"நாம் மலையுச்சிக்குச் சென்று உல்லாசமாய் இருப்போம் வா" என்று சொல்லி மலையின் உச்சிக்கு அவளை அழைத்துச் சென்றான்

அங்கிருந்து, அவளை தள்ள முயற்சிக்க ,குண்டலகேசி சுதாகரித்துக் கொண்டாள்.பின் காலனிடம், "தங்கள் விருப்பம் இதுவானால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கு  முன் கணவனை வலம் வரும் பெண்கள்
பாக்கியசாலிகள்.எனக்கு அந்த பாக்கியத்தை அளிக்க வேண்டும்:" என்றாள்

காளனும் சம்மதித்தான்.

அவனை இருமுறை வலம் வந்தவள், மூன்றாம் முறை வலம் வருகையில் அவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள்.காளன் உயிரிழந்தான்.

பின் குண்டலகேசி, தன் ஆசையே இதற்கெல்லாம்  காரணம் என உணர்ந்து,. ஆசைகளை விட்டொழித்து புத்தரின்  போதனையை உலகெங்கும் பரப்பினாள் இறுதிகாலம் வரை.

(இளம் பெண்கள்..பெற்றோர் சொல் கேட்டு திருமணம் செய்து கொள்வதே பாதுகாப்பு என அன்றே இக்காவியம் உணர்த்துகிறது)

Saturday, June 10, 2017

குண்டலகேசி - 1



(இக்காப்பியம் பௌத்தம் சார்ந்ததாகும்.தன்னை கொலை செய்ய முயன்ற கணவனைக் கொன்று விட்டு பௌத்த துறவியாக ஆகி அச் சமயத்தின் பெருமைகளைப் பரப்பியவர் குண்டலகேசிஎன்ற பெண். .கிபி 7ஆம் நூற்றாண்டு காப்பியம் இது.

குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்று பெயர்)

காவிரிபூம்பட்டிணத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் கரிகாலன் ஆண்டு வந்தான்

அவ்வூரில் வணிகமணி என்றொரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.அவரது மகளே குண்டலகேசி,பேரழகி.மன்னன் அரண்மனைக்கருகில் ஒரு மாளிகையே அவர்கள் வீடு

அவ்வூரில் வணிகம் செய்து வந்தவன் காளன் (சத்துவான் அவனது இயற்பெயர்).வாணிபத்தில் அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், திருடத் தொடங்கினான்.ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்ட அவனைக் காவலர்கள் கைது செய்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்

தன் வீட்டு மாடியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி அக்காட்சியைப் பார்த்தாள்.

அவன் ஒரு குற்றவாளி என்பது பற்றி சிறிதும் கவலைப் படாமல் , அவன் மீது காதல் கொண்டாள்.அந்த அளவிற்கு அழகானவன் காளன்

மன்னன் முன் நிறுத்தப்பட்ட காளனுக்கு, அரசன் மரணதண்டனை விதித்தான்.மறுநாளே அவனை தூக்கிலிடுமாறு ஆணையிட்டான்.

இதனிடையே குண்டலகேசி , தன் தந்தையிடம்  தன் காதலைச் சொன்னாள்.
தந்தை   அவளைக் கண்டித்தும்...தன் முடிவில் பிடிவாதமாய் இருந்தாள்

Friday, June 9, 2017

வளையாபதி - 2



மகன் தந்தையைத் தேடிச் சென்றான்

அவரைக் கண்டு, தான் அவரால் கைவிடப்பட்ட அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்றான்

தந்தையோ அவனை நம்பாமல் அவனை துரத்தியடிக்கிறார்

அவன் தந்தையை வீதிக்கு இழுத்துக் காளியை சாட்சியாக அழைக்கிறான்.தன் தாயின் கற்பினை நிலை நாட்ட வேண்டுகிறான்.காளியின் உதவியால் உண்மையைசெட்டி அறிகிறார்

பின் அவர் மகனை வீரவாணிபன் என்னும் பெயரிட்டு அவனை வாணிகணாகத் தொழில் தொடங்கவும் உதவுகிறான்

இதுதான் வைர வாணிகன் வளையாபதியின் கதைச் சுருக்கமாகும்

ஆனால் வளையாபதி என்ற பெயர் எச்செய்யுளிலும் சொல்லப் படவிலலை

இக்கதையின் தலைவன் சைவ ஐந்தெழுத்தை இறைவணக்க மந்திரமாகக் கொண்டவன். காளியும் ஒரு மையமானப் பாத்திரம்

ஆனால் கிடைத்துள்ள செய்யுள்களோ இது ஒரு சமணநூல் என தெரிவிக்கின்றன

வளையாபதி காத்தவராயன் கதையைப் புராணவடிவத்தில் சொல்லியுள்ளதாக கருதப்படுகிறது.மலையாளத்திலும், தமிழிலும் வழங்கும் காத்தவராயன் கதை சாதி வரம்பை மீறி மணப்பதால் ஏற்படும் துன்பங்களைக் கூறுவது.அதனால் இது ஒரு சமணக்காவியம் என்றும் கூறப்படுகிறது

கிடைத்துள்ள செய்யுள்களை வைத்துப் பார்க்கும் போது , உலக வாழ்வின் இன்பங்களை மறுத்து, துறவறம் போற்றுவதும்,பெண்களின் மீது பொதுவாக வெறுப்பையும் காட்டுவதாகத் தெரிகிறது

பெண் மறுப்பு,சிற்றின்பத் துறவு,புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை போன்றவற்றை இககவியம் கூறுவதால் ..இதன் ஆசிரியர் திறம் மிக்க சமணத் துறவியர் ஆவார்

(ஆதாரங்கள் மயிலை சீனி வெங்கடசாமியின் "மறைந்து போன தமிழ் நூல்கள்)

வளையாபதி - 1



ஐம்பெருங்காப்பியங்களில் நாங்காவதாய் சொல்லப்படுவது வளையாபதி ஆகும்.

வளையாபதியும், குண்டலகேசியும் பற்றி முழுதுமாகக் கிடைக்கவில்லையேயாயினும், வளையாபதியில் ஒன்றுமே கிட்டாமல் இல்லை

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அது தொலையாமல் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.தமிழ்த்தாத்தா எனப் போற்றப்படும் டாக்டர் உ.வே,சாமிநாத ஐயர் அவர்கள், ஒருமுறை திருவாவடுதுறை ஆதின மடத்தின் நூலத்திற்குச் சென்ற போது, வளையாபதியின் சுவடிகளை தம் கண்ணால் கண்டதாகவும், அப்போது, அவர் பழஞ்சுவடிகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாடஹ்தால் அதிப் புறக்கணித்து விட்டதாகவும், பின்னர், சுவடிகளைக் காக்கும் விருப்போடு அங்குச் சென்ற போது அவை காணவில்லை என்றும்..."என் சரித்திரம்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்

வளையாபதியின் ஆசிரியர், இயற்றப்பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர் ,ஆகியவை நமக்குத் தெரியவில்லை.ஆனால், அக்காவியத்தின் 72 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன

இது சமண சமய நூல் .தனியழகுள்ள நூல் என ஒட்டக்கூத்தரும் கருதியதாகத் தெரிகிறது.நூல் கிபி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் போது இயற்றப்பட்டிருக்கலாம்

வளையாபதியின் கதைச் சுருக்கம் இதுவே!

வைரவாணிப மகரிசிக் கோத்திரத்தைச் சேர்ந்தவனும், சிவ பக்தனும் ஆன நவகோடி நாராயணச் செட்டி என்பவனுக்கு இரண்டு மனைவியர்

ஒருத்தி, அவனது சாதியான வைசியச் சாதியைச் சார்ந்தவள்.மற்றொருத்தி வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவள்.

வேற்று சாதிக்காரியை மணந்ததால் நவகோடி நாராயணச் செட்டியின் சாதியைச் சேர்ந்தவர்கள் அவரை சாதியை விட்டு ஒதுக்கி வைக்க, அதனால் செட்டி தன் இரண்டாம் மனைவியை , அவள் கர்ப்பமாக இருந்த போதும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.

பின், செட்டியும் கடல் பயணம் செய்து, வாணீபத்தில் மேலும் பொருளீட்டி திரும்பி, தன் முதல் மனைவியுடன் இன்பமாக இல்லறம் நடத்துகிறான்

சில மாதங்கள் கழிந்தது..

அவனது இரண்டாம் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.அவனை அவள் வளர்த்து வருகையில், அவனின் நண்பர்கள், அவன் தகப்பன் பெயர் தெரியாடஹ்வன் என எள்ளி நகையாடி...அவனைத் துன்புறுத்துகின்றனர்

நாளி எனும் காளியின் வடிவமாகிய தெய்வத்தின் அன்பு கொண்ட அவன் தாய் , அவனது தந்தை யார் என்பதை அவனுக்குத் தெரிவிக்கின்றாள்

(தொடரும்)