Tuesday, October 7, 2014

மணிமேகலை -5





கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர்.  சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான்.  நல்லறிவு பெற்ற நாகர் தலைவன்,  சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.  அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.  ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.  இவ்வாறு ஆதிரையின் வரலாற்றைக் கூறினாள் காயசண்டிகை.  மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள்.  ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே!  என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தன் வரலாற்றை மணிமேகலைக்குக் கூறுகிறாள்.

‘வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்துவிட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர்.   நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன்.  இதை நீ சிதைத்தாய்.  ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான்.  முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசிதீர்ந்தேன்’  என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை,   உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான். அப்போது காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் என்பவன் உதயகுமரன் காயசண்டிகையை அடைய விரும்புகிறான் எனத் தவறாக எண்ணி அவனை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான்.  அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு உண்மையை உணர்த்துகிறது. காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

No comments:

Post a Comment