Saturday, October 4, 2014

மணிமேகலை - 3


மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள்முன் ஒரு புத்த தரும பீடிகை தோன்றுகிறது. தரும பீடிகை என்பது புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனம் ஆகும்.  அதைக் காண்போருக்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.

அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள். முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தமை; இராகுலன் என்பவனை மணந்தமை; அவன் பாம்பு தீண்டி இறந்தமை;  அவனுடன் தீயில் புகுந்து உயிர் துறந்தமை போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறாள் மணிமேகலை. பழம்பிறப்பில் தன் கணவனான இராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறவி எடுத்துள்ளான்.  எனவேதான் தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதை மணிமேகலா தெய்வத்தின் மூலம் பின்னர் அறிந்துகொள்கிறாள்.


மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.

 அப்போது,  இந்திரன் ஏவலால் அத்தீவைக் காத்துவரும் தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அவள்முன் தோன்றுகிறாள்.  அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் தோன்றும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தைப் பற்றிக் கூறுகிறாள்.  அப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் அப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக் கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள். இன்று அப்பாத்திரம் உன்னை வந்து சேரும் என்றும் கூறுகிறாள்.  அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள்.


மணிமேகலைக்கு அறவண அடிகள்,  சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார்.  ஆபுத்திரன் தருமம் செய்தது,  இந்திரன் செயலால் அவன் தன் உயிரை நீத்தது,  தற்போது அவன் சாவக நாட்டில் பிறந்திருப்பது போன்ற விவரங்களைக் கூறுகிறார்.  மேலும் ‘ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு.  எனவே நீ அப்பணியை மேற்கொள்’  எனவும் உரைக்கிறார்.  அதனைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள் கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.  ஆதிரையின் வரலாற்றையும் கூறுகிறாள்.

No comments:

Post a Comment