மணிமேகலை- 6
உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள். அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்; புழுக்கறையில் அடைக்கிறாள்; ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள். மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள். காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள். பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள். அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.
சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள். அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள். அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான். அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம், கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது, மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது. உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது. மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.
மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து, அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள். அவள் மனம் அமைதி பெறவில்லை. அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள். அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள். அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர்மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள் முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’ என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். இந்நிகழ்ச்சியுடன் மணிமேகலைக் காப்பியக் கதை நிறைவு பெறுகிறது.