Saturday, October 4, 2014

மணிமேகலை-2



உதயகுமரன் என்பவன் அந்நாட்டு இளவரசன்.அவன் மணிமேகலை மீது காதல் கொண்டான்.அவளைத் தேடி அவன் உவவனத்திற்கு வந்தான்.அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்து கொண்டாள்.உதயகுமரனுக்கோ பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியவில்லை.அதனால் வருந்தியவன், மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றான்.

உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள்.தன் தோழி சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்துச் சொன்னாள்.

   அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது.    எனவே மணிமேகலையையும் சுதமதியையும் உதயகுமரனிடமிருந்து தப்புவிக்க அவர்களைச் *சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுமாறு கூறுகிறது. . மேலும் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறையும் சொன்னது.

இதற்குள் இரவுப் பொழுதாகிறது. சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள்.    உறங்க ஆரம்பித்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.




(*ஒருமுறை ஒரு பார்ப்பனச் சிறுவன் அந்தச் சுடுகாட்டுக்குள் நுழைந்து விடுகிறான். அங்கு கண்டவற்றால் பயந்து போய் வீட்டுக்கு ஓடிச் சென்று, பயத்தால் அங்கு இறந்துவிடுகிறான். அவனது தாய், தந்தைக்குக் கண் தெரியாது. அந்தச் சிறுவன்தான் அவர்களது ஒரே நம்பிக்கை. அவன் இறந்து போனதைப் பொறுக்க முடியாமல் அவன் தாய் கோதமைஎன்னும் பெயருடையவள், அவனைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டின் புறத்தே இருந்த சம்பாபதி என்னும் தெய்வம் இருக்கும் கோவிலுக்கு வருகிறாள்.
 அவளை மனத்தால் தியானிக்க, அந்தத் தெய்வம் கோதமையின் அகக் கண்ணில் தெரிந்தது. அவளிடம் தன் குறையைச் சொல்லி, தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டினாள். அது இயலாது என்று சம்பாபதி கூறவே, தன் உயிரை எடுத்துக் கொண்டு, மகன் உயிரை மீட்டுத்தர வேண்டினாள். கர்ம பலனால் பிறப்பும், இறப்பும் நேர்வதால், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று சம்பாபதி கூறினாலும், கோதமையின் மீது இரக்கம் கொண்டு ஒருவேளை பிரம்மன், தேவர்கள் போன்றவர்களால் உயிர் கொடுக்கக்கூடும் என்று சொல்லி, எல்லாத் தெய்வங்களையும் அங்கு அழைக்கிறாள்.
நான்கு வகைப் பட்ட அரூபப் பிரம்மர்களையும்,
பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரம்மர்களையும் ,
சூரியன், சந்திரன் என்னும் இரண்டு ஒளிக் கடவுளர்களையும்,
ஆறு வகைப்பட்ட தேவக் கூட்டங்களையும்,
பல் வேறு வகைப் பட்ட அசுரர்களையும்,
பெரும் துன்பம் தரும் எட்டு வகைப் பட்ட நரகர்களையும்,
வானத்தில் சுற்றி வரும் விண்மீன் கூட்டங்களையும்,  நாண்மீன்களையும்,கோள்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கின்ற சக்கரவாளமாகியஇந்த அண்டத்தில்
உறைகின்ற, மக்களுக்கு வரம் தரும் ஆற்றல் படைத்த தேவ கணங்களை சம்பாபதி அங்கே வரவழைத்தாள்.

பொதுவாகச் சக்கரவாளத்தில்தான் அவர்களை ஒன்றாகப் பார்க்க முடியும். அவர்கள் புகார் நகர சுடுகாட்டில் ஒன்று சேர வந்துவிடவே அந்தச் சுடுகாடே சக்கரவாளம் போலாயிற்று.
அதனால் அன்று முதல் அந்தச் சுடுகாட்டை. சக்கரவாளக் கோட்டம் என்றே அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில், அந்தப் பழைய சம்பவம் மறந்து போனதால், சுடுகாடு என்றே அழைத்தனர். இவ்வாறு புகார் நகரத்தில் தேவருலகமான சக்கரவாளத்தினர் ஒரு முறை வந்தனர் என்று மணிமேகலை கூறுகிறது).

                                                       (தொடரும்)

No comments:

Post a Comment